ஆலோசனை 2:

இந்த கொரோனா தொற்று அபாய க்காலப்பகுதியில் சனக்கூட்டங்களை தவிர்த்து பிறரிடமிருந்து தூரப்படுத்துவது கொரோனா பரவுவதை தடுப்பதற்கு அத்தியாவசியமானது.

எனினும் உணவு அடங்கலான அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் சந்தைகளில் பாரியளவில் கூடுவதும், அதிகமாக பொருட்களை வாங்க பல இடங்களுக்கு அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகளால் கொரோனா வேகமாக பரவும் சாத்தியம் அதிகரிக்கின்றது.

இவ்வேளையில் ஊரடங்கினாலோ வேறு காரணங்களினாலோ உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் கொண்டு அளவுக்கதிகமாக பொருட்களை வாங்கிச் சேகரிக்கத் தேவையில்லை. விவசாயம் மற்றும் மீன்பிடி ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் உணவு உற்பத்தி பாதிக்காத வண்ணம் அரசாங்கம் செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. ஊரடங்கு வேளையிலும் வீட்டிலிருந்தவாறே உணவுப்பொருட்களையும் ஏனைய அத்தியாவசிய பொருட்களையும் பெறக்கூடிய வழிவகைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வது குறித்து அநாவசியமாகப் பதற்றப்பட வேண்டியதில்லை.

சிலர் அளவுக்கு அதிகமாக பொருட்களை கொள்வனவு செய்வதால் போலித்தட்டுப்பாடு உருவாகி நலிந்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பம் எழுகிறது. அனைவரும் தேவையான பொருட்களை தேவையான அளவில் மட்டும் வாங்கிக்கொள்வதன் மூலம் இதை தவிர்த்துக்கொள்ள முடியும்.

ஊரடங்கு தொடர்வதால் வருவாய் இல்லாமல் வறியவர்களும் நாள் வருமானத்தில் வாழ்பவர்களும் வருவாய் இன்மையால் உணவுப்பொருட்களை பெறுவதில் இடர்பாடுகளை எதிர்கொள்ளக்கூடும். அவ்வாறான குடும்பங்கள் பசியால் வாடக்கூடும். எங்கள் அயலில் இருக்கும் அவ்வாறான குடும்பங்களுடன் எம்மிடம் இருக்கும் பொருட்களையும் உணவுகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களது பசிபோக்குவது எமது கடமையாகும். மற்றவர்களுக்கு உதவி செய்ய இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

சனக்கூட்டங்கள் ஏற்படாத வண்ணம் தேவையான பொருட்களை தேவையான அளவுகளில் மட்டும் கொள்வனவு செய்வதன் மூலமும், உதவி தேவைப்படுபவர்களுக்கு பொருட்களை பகிர்ந்துதவதன் மூலமாகவும் ஒற்றுமையுடன் இந்த கடினமான காலப்பகுதியை யாரும் பாதிக்கப்பாடாத விதத்தில் எதிர்கொள்வோம்.

அருகில் இருப்பவரை பாதுகாப்பதன் மூலம் அனைவரையும் பாதுகாப்போம்.

நன்றி.

Dr.த.சத்தியமூர்த்தி
பணிப்பாளர்
போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்